Tuesday, 24 May 2011

போஜனம் செய்ய வாருங்கள்

கல்யாணப்பாடல்களில் ஒன்றாக முன்பு சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் என்ற பாடல் உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்கள் என்ற பெரிய பட்டியலோடு ஒரு பாடல் இருக்கிறது அது தான் இந்த பகிர்வில். மாம்பலம் சகோதரிகள் குரலில் இந்த பாடல் இதோ உங்களுக்காய். பாடலைக் கேட்டு முடிக்கும்போது, இது எல்லாம் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு வருவதை நிச்சயமாய் தடுக்க முடியாது! திருப்தியாய் ஒரு கல்யாண போஜனம் செய்ய வாருங்கள்!

பாடல் கேட்க:


பாடல் வரிகள்:

போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்

வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்

மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்…


12 comments:

 1. கல்யாணப் பாடல்கள் என்றே காலை ஊஞ்சலில் ஆரம்பித்து நலங்கு வரை உள்ளது, முடிந்தால் மற்றப பாடல்களும் பகிரவும். நன்றி

  ReplyDelete
 2. voted 3 to 4 in INDLI

  மிகவும் அருமையான பாடல். அத்தனைப் பதார்த்தங்களையும் சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

  இங்கு எங்களுக்குத்தெரிந்த சாரதா மாமி என்று ஒருவர் இருக்கிறார். இது போல நிறைய பாடல்கள் ஒரு நோட்டில் எழுதி வைத்துள்ளார்கள். அழகாகவும் பாடுவார்கள்.

  கல்யாணங்கள், வளைகாப்பு நிகழ்ச்சிகள், பெண்ணை பூச்சூட்டி உட்கார வைச்சுப்பாடும் நிகழ்ச்சிகள், நலங்கு முதலியவற்றிற்கு வந்து பாடி எல்லோரையும் அசத்தி விடுவார்கள்.

  //அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்,
  பால் போளிகளும்
  அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
  சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
  முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
  ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
  பேஷா இருக்கும் பேசரி லாடு
  குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
  பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
  மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
  போஜனம் செய்ய வாருங்கள்//

  ஆஹாஹா..... படிச்சதுமே சுகர் ஏறுகிறது.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. ஆமா கல்யானப்பாடல்கள் எல்லாம் போடுங்க.

  ReplyDelete
 4. கல்யாண நாள் அன்று கல்யாண சாப்பாடு பாடலா.....அசத்துங்கள். மணநாள் வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 5. எல்லோரும் சுவையான, அதே சமயத்தில் உடல் நலம் பேணும் உணவுவகைகளை , கல்யாணப் பாடல் மூலம் எங்களுக்கு தெரிய வைத்திட்ட மாதரசிக்கு எங்கள முதற்கண் வணக்கம். பாடலில் வரும் மாந்தயிர் பச்சிடி ,, இரங்கிக்காய் கிச்சிடி, சேமியா ஹல்வா போன்ற புதுவிதமான அய்ய்டங்கள் தங்கள் கை பக்குவத்தில், தாயிலும் சாலப்பரிந்து பரிமாறிட அதை நாங்கள் உண்ணும் காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வயிறு உப்புசமோ (அ) அஜிர்ணமோ எங்களுக்கு கவலையில்லை, இருக்கவே இருக்கிறது, இஞ்சி ஊறுகாயும் , வேப்பிலைகட்டியும்!!!! லக்ஷ்மி அவர்கள் முன்வைத்த கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்!! வாழ்க , வளர்க உங்கள் தொண்டு.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 6. என்ன அழகானதொரு பாடல்... பொடிநடையாய் டில்லிக்கே நடந்து வந்துவிடப் போகிறேன்.. இதில் பாதி ஐட்டமாவது சமைத்துப்போட மாட்டீர்களா ஆதி..
  நல்ல ரசனை உங்களுக்கு தலைவரைப் போல.
  ஜாடிக்கு ஏத்த மூடி !

  ReplyDelete
 7. கல்யாண நாள் அன்று கல்யாண சாப்பாடு பாடலா.....அசத்துங்கள்.

  ReplyDelete
 8. ஆஹா..அருமையாய் இருக்கிறதே..பார்த்தால் பசி தீரும்!

  ReplyDelete
 9. அருமையான பாடல். திருமண வ்ருந்தை சுவைத்த நிறைவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. நேரமின்மையால் உடனே பதிலிட முடியவில்லை.
  திருமண விருந்து பாடலை ரசித்த அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 11. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  ReplyDelete
 12. திருமண விருந்து பாடல் அருமை ஆதி.
  கீதா அவர்கள் பதிவில் வெங்கட் சொல்லி இருந்தார். கேட்டு விட்டென் அருமை.

  ReplyDelete